புதுச்சேரி வில்லியனூர் கோபாலன் கடை பகுதியைச் சேர்ந்த தனுஷ்கோடி என்பவரின் மகளும் தனியார் மருத்துவமனை நர்ஸுமான பெண்ணை, அப்பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கலைக்குமார் வெட்டி படுகொலை செய்தார். கொலை, கொலை முயற்சி, அடிதடி மற்றும் கஞ்சா வழக்குகள் உட்பட பல குற்றப் பின்னணி கொண்ட கலைக்குமார், சிறைக்குச் சென்று வந்த நிலையில் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் குறித்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
நர்ஸைப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்ற ரவுடி கலைக்குமாரைப் பிடிப்பதற்காகக் காவல் துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் கலைக்குமார் பலத்த காயங்களுடன் பிணமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சடலமாகக் கைப்பற்றப்பட்ட அவரது உடலுக்கு அருகே அவர் பயன்படுத்திய செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை போலீசாரால் மீட்கப்பட்டுள்ளன.
கலைக்குமாரின் உடல் காட்பாடி ரயில் தண்டவாளத்தில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து ரயில்வே மற்றும் உள்ளூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் புதுச்சேரி மற்றும் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
