நாக்பூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் மிளகாய் பொடியை வீசி ரூ. 4 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற 28 வயதான சுராஜ் போஜராஜ் போர்க்கர் என்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பி.எஸ்பி பட்டதாரியான இவர், தற்போது வேலை ஏதும் இன்றி வேலையில்லாமல் இருந்துள்ளார்.
சம்பவத்தன்று, வங்கிக்கு வாடிக்கையாளர் போல சாதாரணமாக வந்த சுராஜ், பணப் பரிவர்த்தனைப் பிரிவை அணுகியுள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை அங்குள்ள ஊழியர்களின் கண்களில் வீசி எறிந்து, அங்கு ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி ரூ. 4 லட்சம் பணத்துடன் தப்பியோட முயன்றுள்ளார். இந்தச் சம்பவம் முழுமையாக வங்கியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பணத்துடன் தப்பிய அவரை வங்கியின் ஊழியர்களும், அங்கிருந்த காவல் துறையினரும் விரட்டிச் சென்று, சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் வைத்து 30 நிமிடங்களுக்குள் பிடித்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட முழு தொகையையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்த போலீசார், வேலை இல்லாத காரணத்தினால் தான் இவர் இக்குற்றத்தில் ஈடுபட்டாரா அல்லது இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
