இயக்குநர் கோகுல் இயக்கத்தில், நடிகர் ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன். இந்த படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஜீவா ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேல்ஸ் கணேஷ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. வரும் ஜனவரி 25ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் சிங்கப்பூர் சலூன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் படத்தின் கதாநாயகன் ஆர்ஜே பாலாஜி , பல சுவாரசியமான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படம் வெளியானது. அந்த படத்தை போனிகபூர் தயாரித்திருந்தார். அந்த படத்தின் ஆடியோ லாஞ்சில் நான் கெஸ்ட் ஆக கலந்துக்கொண்டேன். ஏனெனில் நான் நடித்து இயக்கிய, வீட்ல விசேஷம் படத்தையும் போனிகபூர்தான் தயாரித்திருந்தார்.
அதனால் நான் மேடையில் பேசும்போது, நானும் உதயநிதி ஸ்டாலினும் ஒரே கம்பெனி எடுத்த படங்களில் நடித்திருக்கிறோம். அதாவது போனி கபூர் தயாரித்த படங்களில் நடித்திருக்கிறோம் என்பதை, இருவரும் ஒரே வீட்டில் பெண் எடுத்திருக்கிறோம் என விளையாட்டாக சொன்னேன். பிறகு பேச வந்த உதயநிதி ஸ்டாலினும், ஆமாம், நானும் ஆர்ஜே பாலாஜியும் ஒரே வீட்டில் பெண் எடுத்தவர்கள் என ஜாலியாக பேசினார்.

நாங்கள் பேசிய அந்த 20 விநாடி வீடியோவை கட் செய்து எடுத்து, டிவிட்டரில் போட்டு வைரலாக்கி விட்டனர். என்னோட ஒய்ப்பும், அவரோட ஒய்ப்பும் அக்கா, தங்கச்சி. நாங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டில் பொண்ணு எடுத்திருக்கோம். உழைப்பால் உயர்ந்தவன் ஆர்ஜே பாலாஜி என்று நினைத்தால், நீயும் அரசியல் பின்புலத்தால் உயர்ந்தான். அதனால்தான், சிங்கப்பூர் சலூன் படத்தை ரெட் ஜெயிண்ட் ரிலீஸ் செய்கிறது என்று கூறுகின்றனர்.

ஆனால் அந்த வீடியோவில் உண்மையை காட்டவில்லை. இன்னும் 5 செகன்ட் பார்த்திருந்தால், உண்மை என்னவென்று தெரிந்திருக்கும். அதனால், ரெட்ஜெயின்ட் அதற்காக சிங்கப்பூர் சலூன் படத்தை வாங்கவில்லை. ரெட் ஜெயின்ட் ஒரு மார்க்கெட் லீடர். நல்ல கதைகளை, நல்ல படங்களை தேடிப்பிடித்து வாங்குகின்றனர். பெரிய படங்களாக பார்த்து ரிலீஸ் பண்றாங்க. இந்த படம் அவங்க டீம் பார்த்து, அவங்களுக்கு கண்டென்ட் பிடித்துப் போய், அந்த கண்டென்ட் நம்பிதான் வாங்கறாங்க. நானும் உதயநிதி ஸ்டாலினும் சகலப்பாடி கிடையாது. நான் ஒரு வானம்பாடி. அப்படியே ஓரமாக பறக்கிறவன், என்று அதில் பேசியிருக்கிறார் நடிகர் ஆர்ஜே பாலாஜி.
