“சாதி வெறியின் உச்சம்: காதலித்த பெண்ணுக்கு மொட்டை அடித்து சித்திரவதை!”…. கிருஷ்ணகிரியை உலுக்கிய சம்பவம்…!

By Nanthini on சித்திரை 29, 2026

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குந்துமாரனப்பள்ளியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் தேஜாஸ்ரீ, தனது காதலுக்காகப் பெற்றோர் அளித்த கொடூரமான சித்திரவதைகளை விவரித்து மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனு சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேஜாஸ்ரீயும், அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதான தீபக்கும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், இருவருடைய சமூகமும் வேறானதால் தேஜாஸ்ரீயின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாதிப் பெருமைக்காக மகளின் உணர்வுகளை மதிக்காத பெற்றோர், அவரைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததால், பாதுகாப்பு தேடி கடந்த 2025 ஏப்ரல் மாதம் தேஜாஸ்ரீ தனது காதலன் தீபக் வீட்டில் தஞ்சம் புகுந்தார்.

தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கருதிய காதலர்கள் இருவரும் ஓசூரில் உள்ள உறவினர் வீட்டில் மறைந்து வாழ்ந்து வந்தனர். ஆனால், அங்கேயும் அடியாட்களுடன் புகுந்த தேஜாஸ்ரீயின் பெற்றோர், அவரை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றுள்ளனர். காமன்தொட்டி அருகே உள்ள கோபச்சந்திரம் ஆற்றங்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண்ணுக்கு, ஊரே நடுங்கும் வகையில் மொட்டை அடிக்கப்பட்டுள்ளது. மனிதநேயமற்ற முறையில், ஒரு பெண் கணவனை இழந்தால் செய்யப்படும் கொடூரமான சடங்குகளை உயிருடன் இருந்த தேஜாஸ்ரீக்கு அவரது பெற்றோர் கட்டாயப்படுத்திச் செய்து பார்த்தது பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைத்துள்ளது.

   

சித்திரவதைகளின் உச்சமாக, தேஜாஸ்ரீக்குக் கருச்சிதைவுக்கான மாத்திரைகளை வலுக்கட்டாயமாக அளித்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிதைக்க முயன்றுள்ளனர். இந்த நரக வேதனையில் இருந்து எப்படியோ போராடித் தப்பிய தேஜாஸ்ரீ, கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் தனது காதலன் தீபக் இல்லத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். ஏற்கனவே இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், இப்போதும் தனது பெற்றோர் தீபக் மீது பொய்யான புகார்களை அளித்துத் தங்களைப் பிரிக்க முயற்சிப்பதாகத் தேஜாஸ்ரீ கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

   

காதலித்த ஒரே காரணத்திற்காகத் தன் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்த தேஜாஸ்ரீ, தனக்கும் தனது காதலனுக்கும் சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அச்சுறுத்தல் விடுக்கும் தனது பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார். சாதி வெறியால் பெற்ற மகளையே சித்திரவதை செய்த இந்தச் சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.