திருப்பூரை சேர்ந்த ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மகளின் இறப்பை தாங்க முடியாமல் ரிதன்யாவின் பெற்றோர் கதறி அழுத வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் கலங்க வைத்தது. அதில் தன் மகள் ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறியது பெருமையாக இருக்கிறது என ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை பேசியதற்கு பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. இப்படியான நிலையில் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, தாய் ஜெயசுதா ஆகியோர் சமீபத்தில் youtube சேனலுக்கு பேட்டியளித்த போது, பொண்ணு இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் இருக்கும்போது அந்த வார்த்தை எங்களுக்கு தெரியாமல் வந்துவிட்டது.
பொண்ணு இறந்ததற்கு எவனாவது பெருமைப்படுவானா. எல்லாம் எமோஷனலான வார்த்தைகள் தான். சொத்து வசதியை பார்த்து நாங்கள் திருமணம் செய்து வைக்கவில்லை. நல்ல பையன் வீட்டிற்கு ஒரே மகன் அதற்கும் மேலாக பக்கத்திலேயே இருப்பதால் எங்களுடைய மகளை அடிக்கடி பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் திருமணம் செய்து வைத்தோம். எங்க பையன் கிட்ட ரிதன்யா நிறைய பேசினார். ரொம்ப டார்ச்சர் பண்றாங்க, சொத்தை பத்தியும் கேட்கறாங்க, எல்லோரும் தனியார் சாப்பிடுறாங்க, எனக்கு மென்டலா இதெல்லாம் தாங்கிக்க முடியல, சமையலறைக்கு போக விடமாட்டாங்க, வாஷிங்மெஷினில் துணி துவைக்க கூடாது கையில் தான் துணி துவைக்க வேண்டும், பாத்திரம் கழுவி விட்டு வீட்டிலேயே இருக்கணும் என்று நிறைய சொல்லி அழுது இருக்கிறாள்.
வீட்டிற்கு வந்தபோது நான் புரிஞ்சுகிட்டு 15 நாள் இங்கேயே இரு, அவங்க போன் பண்ணா நான் பேசிக்கிறேன் என்று கூறினேன். பிறகு ரிதன்யா தம்பி கூட ஆஸ்திரேலியாவில் ஒரு வருடம் இருக்கட்டும், இல்லையென்றால் ஏதாவது வேலைக்கு போயிட்டு இரண்டாவதா கூட ஏதாவது பாத்துக்கலாம் சாமி என்று தான் நாங்கள் சொன்னோம். உடனே இரண்டாவது கல்யாணம் செய்வதற்கு நான் என்ன நாயா, வாழ்ந்தா அவன் கூடத்தான், இல்ல நா உங்க கூட வந்து இருப்பேன் என்று சொல்லிட்டா. அவளுக்கு நடந்த கொடுமை எல்லாம் சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு அம்மா கிட்ட சொல்றா.
பொண்ணு எல்லாம் சொல்லிட்டா எல்லா குடும்பத்திலயும் இருக்கிறது தான், பேசிக்கலாம் என்று அந்த வீட்டிற்கு வந்த ஒரு நபர் கூறி நீ வாழாமல் உங்க அப்பா அம்மா வீட்டுக்கு போயிட்டா அவங்க வேதனை படுவாங்க என்று சொல்லியதும் என் பொண்ணு மன உளைச்சலுக்கு உள்ளாகிட்டா. மாமனார் மாமியார் மன்னிப்பு கேட்டா ஒருவேளை நம்பல மீண்டும் திரும்ப அனுப்பி விடுவார்களோ என்று பயம் அவளுக்கு ஒரு பக்கம் இருந்தது. மற்றொரு பக்கம் இங்க வந்து எங்களை யாராவது பேசிட்டா நாங்க கேவலப்பட்டிடுவோம் என்று ஆழமாக மனசுல பதிஞ்சிருச்சு. எங்க பொண்ணுக்கு நீதி கிடைக்க போராடிகிட்டு இருக்கோம். எந்த பொண்ணுக்கு இது நடக்கக்கூடாது என்று தான் நாங்கள் போராடிட்டு இருக்கோம் என்று வேதனையுடன் பெற்றோர் பேட்டியளித்துள்ளனர்.
