சில மணிநேரங்களில் பழுத்த மாம்பழங்கள்.. வெளியே மஞ்சள், உள்ளே விஷம்… வெளியான பகீர் சம்பவம்..!!

By Swetha on வைகாசி 6, 2026

Spread the love

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடைக்காலத்தில் மாம்பழங்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம்  ‘ஆபரேஷன் மேங்கோ’ என்ற பெயரில் அதிரடி சோதனையைத் தொடங்கியுள்ளது. நவி மும்பையின் வாசியில் உள்ள ஏபிஎம்சி  பழச் சந்தை மற்றும் கல்யாண், பிவண்டி போன்ற இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில், நூற்றுக்கணக்கான மாம்பழப் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில வியாபாரிகள் அதிக லாபத்திற்காக இயற்கைக்கு மாறாக சில மணிநேரங்களிலேயே மாம்பழங்களைப் பழுக்க வைக்க முயற்சிப்பது இந்தச் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையின் போது, மாம்பழங்களைப் பழுக்க வைக்க தடை செய்யப்பட்ட ‘கால்சியம் கார்பைடு’ மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான ‘எத்திலீன்’ திரவம் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. கால்சியம் கார்பைடில் இருந்து வெளியாகும் அசிட்டிலீன் வாயு உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது. ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட இந்த மாம்பழங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாகவும் மஞ்சள் நிறத்திலும் இருந்தாலும், அவை உள்ளுக்குள் சரியாகப் பழுத்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

   

இத்தகைய நச்சுத்தன்மை வாய்ந்த மாம்பழங்களை உண்பதால் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் என்று எஃப்டிஏ  அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக தலைவலி, தலைச்சுற்றல், சுவாசிப்பதில் சிரமம், வயிறு தொடர்பான நோய்கள் மற்றும் நீண்ட கால அடிப்படையில் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 150 குழுக்கள் இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மாம்பழங்களை வாங்கும் போது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.