பத்திரப்பதிவில் 11 அதிரடி மாற்றங்கள்… இனி QR கோடு ஸ்கேன் பண்ணா போதும்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on தை 27, 2026

Spread the love

தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையில் பொதுமக்களின் வசதிக்காகவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் 11 முக்கிய மாற்றங்களை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் மிக முக்கியமான அம்சம் ‘ஸ்டார் 3.0’ மென்பொருள் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காகிதமில்லா மற்றும் நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு ஆகும். இனி புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டுமனைகளை வாங்குவோர், சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலேயே இணையவழியில் பத்திரப்பதிவு செய்து, மின்னணு கையொப்பமிட்ட ஆவணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆவணப்பதிவின் போது நம்பகத்தன்மையை உறுதி செய்ய அசல் ஆவணங்கள் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மூதாதையர் சொத்துக்களுக்கு அசல் பத்திரம் இல்லாத பட்சத்தில் வருவாய்த்துறை பட்டாவை சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை அசல் ஆவணங்கள் தொலைந்து போயிருந்தால், அது குறித்து காவல் துறையில் புகார் அளித்து, நாளிதழில் விளம்பரம் செய்த நகலை வழங்க வேண்டும். மேலும், அடமானத்தில் உள்ள சொத்துக்களுக்கு சம்பந்தப்பட்டவரிடம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெறுவது இப்போது அவசியமாக்கப்பட்டுள்ளது.

   

பொதுமக்கள் இடைத்தரகர்கள் இன்றி தங்களின் ஆவணங்களை தாங்களே உருவாக்கிக்கொள்ள ‘தானியங்கி பத்திர உருவாக்கம்’ வசதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன், ரூ.1000-க்கு குறைவான கட்டணங்களை QR கோட் மூலம் செலுத்தும் வசதி, வில்லங்கச் சான்றிதழை (EC) எளிதாகத் தேடிப் பெறும் முறை மற்றும் அடுக்குமாடி குடியிருப்போர் சங்கங்களை ஆன்லைன் வாயிலாகவே பதிவு செய்யும் வசதி போன்றவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. திருமணப் பதிவுகளை மணமக்களின் பெயர் மற்றும் பிறந்த தேதியை வைத்து எளிதாகத் தேடும் வசதியும் இதில் அடங்கும்.

   

இந்தத் தொழில்நுட்ப மாற்றங்கள் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பொது அதிகார ஆவணங்கள் மற்றும் சான்றிட்ட நகல்களை இணையவழியில் உடனுக்குடன் பெற முடியும். ‘TNREGINET’ கைபேசி செயலி மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் வாயிலாக சேவைகளின் நிலையை அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் பத்திரப்பதிவுத் துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதோடு, பொதுமக்களின் நேரத்தையும் அலைச்சலையும் பெருமளவு குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.