தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை இருந்த நிலையில் தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைப்பதற்கு பாஜக மற்றும் அதிமுக முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் விஜய் பாஜக மற்றும் திமுகவை தங்கள் எதிரி என்று கூறிக் கொண்டிருக்க அது எப்படி சாத்தியமாகும் என்பதும் ஒரு பக்கம் கேள்விக்குறியாக தான் உள்ளது. இருந்தாலும் சமீபத்தில் கரூரில் நடைபெற்ற விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பாஜக விஜயை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிகிறது. இதனிடையே கரூர் விவகாரத்தில் முதலில் ராகுல் காந்தியை விஜய்க்கு போன் செய்து பேசியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இதனால் இருவரும் கூட்டணி அமைக்கிறார்களா என்ற பேச்சும் அடிபட்டது. இருந்தாலும் ராகுல் காந்தியை பொறுத்தவரை திமுக கூட்டணியை முறித்துக் கொள்ள தயாராக இல்லையாம். இந்நிலையில் அரசியலில் முதல் முறையாக களமிறங்கும் விஜய்க்கு தேர்தல் நேரத்தில் மக்களின் முடிவு பக்குவத்தை ஏற்படுத்தும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். கரூர் விவகாரத்தில் விஜயுடன் ராகுல் காந்தி பேசியது கூட்டணிக்காக அல்ல என்ற விளக்கம் அளித்துள்ளார். மேலும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளதாகவும் அதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார்
