மீண்டும் உயர்கிறதா விலைவாசி..? ஆர்பிஐ சொல்லப்போகும் முடிவு என்ன..? வீட்டுக் கடன், வாகன கடன் வாங்கியவர்கள் உஷார்..!

By Swetha on வைகாசி 31, 2026

Spread the love

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நாணய கொள்கைக் குழு (MPC) கூட்டம் ஜூன் 3 முதல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெறும் இந்த 3 நாள் கூட்டத்தின் முடிவில், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் 5.25 சதவீதமாகவே தொடரும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாத கூட்டத்திலும் வட்டி விகிதம் மாற்றப்படாமல் இருந்த நிலையில், தற்போதும் அதே நிலைப்பாடே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முக்கியக் காரணமாக மேற்கு ஆசியப் பகுதியில் நிலவி வரும் போர் பதற்றங்கள் பார்க்கப்படுகின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, சப்ளை செயின் (வழங்கல் சங்கிலி) சிக்கல்கள் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற சவால்கள் எழுந்துள்ளன. இந்த உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணிகளால் நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயமும், ஜிடிபி வளர்ச்சி சற்று குறையும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

   

ஒருவேளை ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்தாலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது சாமானிய மக்களின் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களான காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். எனவே, தற்போதைய சூழலில் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பதோடு, பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் வகையிலான எச்சரிக்கையான முடிவுகளையே ரிசர்வ் வங்கி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.