தவெகவை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது… அதிமுக பக்கம் வந்துடுங்க… விஜய்யை மிரட்டி பார்க்கும் அதிமுக…!

By Nanthini on ஐப்பசி 21, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக மற்றும் திமுக இடையே தொடரும் போட்டியில் நடிகர் விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்பாக மாறி உள்ளது. இதனிடையே கரூர் விவகாரத்தை தங்கள் ஆதரவாக மாற்றிக் கொள்ளும் வகையில் அதிமுக மற்றும் பாஜகவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் விஜய் கூட்டணி யாருடன் அமைக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் அதிமுக முன்னால் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தபோது, ராட்சத பலம் வாய்ந்த திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றிக்கழகம் சேர வேண்டும். அதுதான் தொண்டர்களுடைய விருப்பம். தகுந்த நேரத்தில் சரியான முடிவை எடுப்பவர்தான் நல்ல தலைவர். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவன் நினைத்தாலும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை காப்பாற்ற முடியாது. சிரஞ்சீவி அரசியல் கட்சி தொடங்கி சரியான முடிவை எடுக்காததால் தோல்வி அடைந்தார். பவன் கல்யாண் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்ததால் துணை முதல்வர் ஆனார்.

   

சரியான முடிவை எடுக்காததால் வைகோவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானது. கூட்டணி விவகாரத்தில் திமுக தலைமை மிக சரியாக பயணிக்கிறது. முதலில் கட்சி இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அரசியல் செய்யலாம், மக்களுக்கு பணியாற்ற முடியும். எனவே தனது கட்சியை காப்பாற்றும் நல்ல முடிவை விஜய் எடுப்பார் என நினைக்கின்றேன். அனுபவமுள்ள அதிமுகவுடன் பயணிப்பது குறித்து விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் வாய்ப்பிருக்கிறது. மீண்டும் ஒருமுறை திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் இந்த நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.