தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் இல்லங்களுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் சேவை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டம் சென்னை மண்டலத்திற்குட்பட்ட ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், கொளத்தூர், மயிலாப்பூர், தாம்பரம், மதுரவாயல் உள்ளிட்ட 19 மண்டலங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. இங்குள்ள கூட்டுறவுத் துறையின் 1,346 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
மாதந்தோறும் முதல் வாரத்தில் வழங்கப்படும் இச்சேவை மூலம் 21 லட்சத்திற்கும் அதிகமானோர் பலனடைந்து வருகின்றனர். எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளும் ஆகஸ்ட் மாதத்திற்கான இந்த விநியோக சேவையைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
