மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் இனி தங்களுக்குரிய உணவுப் பொருட்களைப் பிரித்து வெவ்வேறு நியாய விலைக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் என்ற புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு கடையில் கோதுமையையும், மற்றொரு கடையில் அரிசியையும் பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப பெற்றுக் கொள்ள முடியும். இந்த வசதியை மத்திய இணை அமைச்சர் பி.எல். வர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த புதிய மாற்றத்தின் மூலம், ரேஷன் கடைகளில் ஒரே பொருளுக்காக பொதுமக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அலைச்சல் குறையும். மேலும், ஒரு கடையில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது குறிப்பிட்ட பொருட்களின் இருப்பு பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்படாமல், தங்களுக்குத் தேவையான பொருட்களை மாற்று கடைகளில் எளிதாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறிப்பாக வாழ்வாதாரத்திற்காகப் பல்வேறு இடங்களுக்குப் புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஏடிஎம் இயந்திரங்கள் செயல்படுவதைப் போன்ற இந்த எளிய ரேஷன் விநியோக முறை, நவீன டிஜிட்டல் வசதிகள் மற்றும் பயோமெட்ரிக்ஸ் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா முழுவதும் சாத்தியமாக்கப்பட்டுள்ளது.
