தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு குடும்ப அட்டைகள் மிக முக்கியமான ஆதாரமாக விளங்குகின்றன. தற்போது மகளிர் உரிமைத் தொகை மற்றும் பொங்கல் பரிசு போன்ற அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் ரேஷன் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், ரேஷன் கார்டுகளில் உள்ள பிழைகளைத் திருத்த முடியாமல் பொதுமக்கள் படும் சிரமங்களைக் குறைக்க, தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் அந்தந்த வட்டாரங்களில் குறைதீர் முகாம்களை நடத்தி வருகிறது.
அந்த வகையில், 2026 மார்ச் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் வரும் மார்ச் 14-ஆம் தேதி (14.03.2026) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி பொதுமக்கள் மிகக் குறுகிய காலத்திலேயே தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
இந்த முகாம்களில் குடும்ப அட்டையில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல், தேவையற்ற பெயர்களை நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் மற்றும் செல்போன் எண் மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். அதுமட்டுமின்றி, நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களைப் பெற இயலாத முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு, மற்றொருவரைப் பரிந்துரைப்பதற்கான அங்கீகாரச் சான்றும் இந்த முகாமில் வழங்கப்படும்.
ரேஷன் கார்டு திருத்தங்கள் மட்டுமின்றி, நியாய விலைக் கடைகளின் செயல்பாடு மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் பொதுமக்கள் இம்முகாமில் தெரிவிக்கலாம். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 19 மண்டல அலுவலக எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் குடும்ப அட்டையில் உள்ள குறைகளைச் சரிசெய்து அரசின் நலத்திட்டங்களை தங்குதடையின்றி பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
