அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மின்சார உள்கட்டமைப்பை (Electricity Infrastructure) வெறும் ஒரு மணி நேரத்தில் தரைமட்டமாக்க முடியும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். அவ்வாறு அழித்தால், அதை மீண்டும் கட்டி எழுப்ப ஈரானுக்கு 25 ஆண்டுகள் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி (Ali Larijani), எக்ஸ் (X) தளத்தில் ஒரு கடுமையான எச்சரிக்கையைப் பதிவிட்டுள்ளார்.
லாரிஜானி தனது பதிவில், அமெரிக்கா ஈரானின் மின்சார விநியோகத்தைத் தாக்கினால், அடுத்த அரை மணி நேரத்திற்குள் ஒட்டுமொத்த பிராந்தியமும் இருளில் மூழ்கும் என்று தெரிவித்துள்ளார். அந்த இருட்டைப் பயன்படுத்தி, உயிர் பிழைக்க ஓடும் அமெரிக்க ராணுவ வீரர்களைத் தேடி வேட்டையாட (Hunt down) தங்களுக்குப் போதுமான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். டிரம்ப் வெறும் ட்வீட்கள் மூலம் இந்தப் போரை வென்றுவிட முடியாது என்றும் அவர் சாடியுள்ளார்.
ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ள ஈரான், அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலுக்கும் “ஈடு செய்ய முடியாத சேதத்தை” (Irreparable damage) ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனியும் தனது முதல் உரையில் அமெரிக்க ராணுவத் தளங்களை மூடுமாறு வலியுறுத்தியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த நேரடி மோதல் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
