10-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஜெம் கிரானைட்ஸ் அதிபர் R. வீரமணி உட்பட மூவரை காவல்துறையினர் ஏற்கெனவே கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய SRMU தொழிற்சங்கத் தலைவர் கண்ணையாவின் மகன் பிரகாஷ்க்கு எதிராகக் காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் வழங்கப் பிரகாஷின் வீட்டிற்குச் சென்றபோது, அவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, கைது நடவடிக்கைக்குப் பயந்து வெளிநாட்டிற்குத் தப்பியோடிய பிரகாஷ், இந்தியாவில் உள்ள எந்தவொரு விமான நிலையத்தில் வந்து இறங்கினாலும் அவரை உடனடியாக விமான நிலையத்திலேயே கைது செய்யும் வகையில் இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், இந்தச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் (FIR) தனது பெயர் இடம்பெறாமல் இருக்கவும், கைது நடவடிக்கையைத் தவிர்க்கவும் ஜெம் வீரமணி ரூ. 70 கோடி மதிப்பிலான தொகையைக் காவல் துறை உயரதிகாரிகளுக்கும் முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் செட்டில்மென்ட் செய்ய முயன்றதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. உதயநிதியுடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படும் ரத்தீஷ் ராஜ் என்ற தொழிலதிபர் மூலமாக இந்த ரூ. 70 கோடி பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரத்தீஷ் ராஜ் ஏற்கெனவே தமிழ்நாட்டில் டாஸ்மாக் (TASMAC) முறைகேடுகள் மற்றும் பல்வேறு அரசியல் சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, கைதுக்கு அஞ்சி வெளிநாட்டிற்குச் சென்று தலைமறைவாக இருக்கும் SRMU கண்ணையாவின் மகன் பிரகாஷ், இந்த ரத்தீஷ் ராஜுடன் இணைந்தே செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முயலும் நபர்களைக் கைது செய்யவும், ரூ. 70 கோடி பணப்பரிவர்த்தனை பின்னணியில் உள்ள அதிகார மையங்களை அம்பலப்படுத்தவும் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
