ஒடிசா மாநிலம் பாலேஸ்வர் மாவட்டத்தில் உள்ள உதய்பூர்-தால்சாரி சவுக் மரக் காட்டுப் பகுதியில், இந்தியாவில் வாழாத அபூர்வ வகை உயிரினமான 5 குரங்குகள் அனாதையாகக் கைவிடப்பட்ட நிலையில் சுற்றித் திரிவது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்த வனத்துறையினர், அந்த 5 குரங்குகளையும் பத்திரமாக மீட்டனர்.
இயற்கையாகவே மலேசியா, இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய தீவுகளில் மட்டுமே வாழக்கூடிய இந்த அபூர்வ குரங்கு வகைகள், ஒடிசா கடற்கரை கிராமத்திற்குக் எப்படி வந்தது என்பது குறித்து வனத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பன்னாட்டு வனவிலங்கு கடத்தல் கும்பல் கடல் வழியே கடத்தி வரும்போது மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் இங்கே வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட 5 குரங்குகளும் புவனேஸ்வரில் உள்ள நந்தன்கானன் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு கேமராக்கள் பொருத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு மிகவும் சிறிய குட்டிகள் என்பதும், ஒரு குட்டிக்கு காய்ச்சல் இருந்ததால் மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவை பராமரிப்பாளர்களின் கைகளில் இருந்து பழங்களை வாங்கிச் சாப்பிடத் தொடங்கியுள்ளன.
