“கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து”… 2 வயது குழந்தையின் தந்தையின் வயிற்றில் ஏறிய பஸ்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்த இளைஞர்..!

By Nanthini on ஆனி 30, 2026

Spread the love

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே சென்னை – பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசு பேருந்து, சீனிவாசபேட்டை பகுதியைச் சேர்ந்த சரத் (எ) ஷாம் (31) மற்றும் அவரது நண்பர் பயணித்த இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் பின்சக்கரம் ஏறியதில் சரத் உடல் நசுங்கி உயிரிழக்க, அவருடன் பயணித்த நண்பர் பலத்த காயங்களுடன் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது சென்னை – பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாகவும், குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்கை அடைய வேண்டும் என்ற அவசரத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதாலும் தொடர் விபத்துகள் அரங்கேறி வருகின்றன. நெடுஞ்சாலைகளில் பேருந்துகள் திடீரென பிரேக் போடும்போதோ அல்லது இருசக்கர வாகனங்களை உரசிச் செல்லும்போதோ, பின்னால் அமர்ந்திருப்பவர்கள் நிலைதடுமாறி சாலையின் நடுவே விழுந்து, பின்னால் வரும் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிக் கொள்ளும் அவலம் தொடர்கதையாகி வருகிறது.

   

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவேரிப்பாக்கம் காவல்துறையினர், உயிரிழந்த சரத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் அதனைச் சீரமைத்தனர்.

   

விபத்தில் அநியாயமாக உயிரிழந்த சரத் என்பவருக்குத் திருமணமாகி, இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில நொடிகள் கவனக்குறைவாலும், கட்டுப்பாட்டை இழப்பதாலும் ஏற்படும் இதுபோன்ற விபத்துகளால், ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிறது. இளம் வயதிலேயே குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் அந்த 2 வயது குழந்தையின் குடும்பத்தினரிடமும், அப்பகுதி பொதுமக்களிடமும் இச்சம்பவம் ஆறாத் துயரத்தையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.