தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக ராமராஜன் கோலோச்சியது நான்கே நான்கு வருடங்கள்தான். ஆனால் இன்றளவும் அவருக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த நான்கு ஆண்டுகளில் அவருக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். எம் ஜி ஆர் போல ஒழுக்கமான இளைஞனாக மக்கள் தோழனாக தன்னைக் காட்டிக்கொண்டார் ராமராஜன்.
1987 முதல் 1990 வரை பிஸியான நடிகராக இருந்தார். அப்போது அவரின் தங்கமான ராசா திரைப்படம் ரஜினியின் மாப்பிள்ளை படத்தின் வசூலையே தாண்டியதாம். ஆனால் 90 களுக்குப் பிறகு ராமராஜனின் மார்க்கெட் சரிய ஆரம்பித்துள்ளது. ராமராஜனின் சினிமா வாழ்க்கை ஆரம்பித்ததே ஒரு இன்ப விபத்துதான். ராமராஜன்(அப்போது குமரேசன்) மதுரை மேலூரில் இருக்கும் ஒரு தியேட்டரில் டிக்கட் கிழிக்கும் வேலை செய்து வந்தார். அந்த தியேட்டர் ஓனர் மூலமாக சென்னை வந்து இராமநாராயணன் ஆபிஸ்ல ஆபிஸ் பாயா வேலை பார்தவர் அவரிடமே உதவி இயக்குனர் ஆனார்.
1985 ஆம் ஆண்டு வெளியான மண்ணுக்கேத்த பொன்னு என்ற திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் மருதாணி, ஹலோ யார் பேசுகிறதே, மறக்க மாட்டேன், சோலை புஷ்பங்கள் ஆகிய திரைப்படங்களை அவர் ஹீரோ ஆவதற்கு முன்பு இயக்கினார். இந்த படங்கள் எல்லாம் கையைக் கடிக்காத அளவுக்கு ஓடி, அவரை ஒரு இயக்குனராக நிலைநிறுத்தின.
அப்போதுதான் அவருக்கு ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தில் கதாநாயகன் ஆகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. தான் நடிக்கதானே சினிமாவுக்கு வந்தோம் என்று அந்த படத்தின் வாய்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். அந்த படத்தை வி அழகப்பன் இயக்கினார். அந்த 100 நாள் தியேட்டர்களில் ராமராஜனுக்கு ஹீரோவாக ஒரு இடத்தைக் கொடுத்தது.
அதன் பின்னர் வி அழகப்பன் அடுத்து இயக்க இருந்த ’பூமழை பொழியுது’ படத்தில் ராமராஜனைக் கேட்டுள்ளார். அவரும் கதைக் கேட்காமலேயே சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த படத்தில் விஜயகாந்த்தான் ஹீரோ, தான் செகண்ட் ஹீரோ என்று தெரிந்ததும் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம்.
இது சம்மந்தமாக அந்த இயக்குனரிடம் பேசிய ராமராஜன் “என்ன அண்ணே நீங்களே என்னை ஹீரோவாக்கிவிட்டு, இப்போ செகண்ட் ஹீரோவாக நடிக்க சொல்கிறீர்கள்” எனக் கேட்டாராம். அதைப் புரிந்துகொண்ட அந்த இயக்குனரும் ராமராஜனை வற்புறுத்தவில்லையாம்.
