தமிழ் சினிமாவில் ஒரு குறுகிய கால சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக ராமராஜன் கோலோச்சியது நான்கே நான்கு வருடங்கள்தான். ஆனால் இன்றளவும் அவருக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த நான்கு ஆண்டுகளில் அவருக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். எம் ஜி ஆர் போல ஒழுக்கமான இளைஞனாக மக்கள் தோழனாக தன்னைக் காட்டிக்கொண்டார் ராமராஜன்.
1985 ஆம் ஆண்டு வெளியான மண்ணுக்கேத்த பொன்னு என்ற திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் மருதாணி, ஹலோ யார் பேசுகிறதே, மறக்க மாட்டேன், சோலை புஷ்பங்கள் ஆகிய திரைப்படங்களை அவர் ஹீரோ ஆவதற்கு முன்பு இயக்கினார். இந்த படங்கள் எல்லாம் கையைக் கடிக்காத அளவுக்கு ஓடி, அவரை ஒரு இயக்குனராக நிலைநிறுத்தின.
அப்போதுதான் அவருக்கு ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தில் கதாநாயகன் ஆகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அந்த படம் ஹிட்டாக அடுத்தடுத்து சில வெற்றிப் படங்களைக் கொடுத்தார். கரகாட்டக்காரன் திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. அதன் பின்னர் அவர் நடித்த சில படங்கள் தோல்வியை சந்தித்ததால் அவரின் வீழ்ச்சி தொடங்கி 90 களின் ஆரம்பத்திலேயே அவர் தன்னுடைய் மார்க்கெட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்தார்.

#image_title
இந்நிலையில் ராமராஜன் கதாநாயகனாக உச்சத்தில் இருந்த போது அவர் செய்த ஆச்சர்யமான விஷயம் பல தயாரிப்பாளர்களை அறிமுகப்படுத்தியதுதான். அவர் 20க்கும் மேற்பட்டவர்களை தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளார்.
அப்போது அவரின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தததால் ராமராஜனின் கால்ஷீட் இருந்தால் பைனான்ஸ் கிடைத்துவிடும் என்ற சூழல் இருந்ததாம். அதனால் அவர் சைக்கிளில் அவர் வீட்டுக்கு வந்து அவரிடம் கால்ஷீட் பெற்று வீட்டை விட்டு செல்லும் போது தயாரிப்பாளராக சென்றவர்கள் எல்லாம் உண்டு என சொல்லப்படுவதுண்டு. தனக்கென்று ஒரு மார்க்கெட் இருக்கும் போது முன்னணி தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்திருந்தால் தன்னை இன்னும் அதிகமாக ப்ரமோட் செய்து கொண்டிருக்கலாம். ஆனால் ராமராஜன் அதை செய்யாமல் புதியவர்களைக் கொண்டுவந்ததுதான் அவரின் தனிச்சிறப்பு.
