கண்ணுல கிளிசரின் வச்சு அழுறாங்க… இது வெறும் நடிப்பு… அன்னைக்கு என்னை யாருமே பார்க்க வரல… பேத்திகள் அழுதது குறித்து டாக்டர் ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு..!!

By Soundarya on சித்திரை 18, 2026

Spread the love

தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸ் குறித்து இதுவரை இல்லாத அளவிற்குக் கடுமையான மற்றும் உருக்கமான விமர்சனங்களை முன்வைத்தார். “அன்புமணி யார் என்று என்னிடம் கேட்டால், அவர் ஒரு பொய்யர், பொய் பேசுவதிலேயே வல்லவர் என்றுதான் சொல்வேன்; எதற்கும் கூசாமல், யோசிக்காமல் பொய் சொல்லக்கூடியவர் அவர்” என்று ஆவேசமாகத் தொடங்கினார். ஒரு காலத்தில் மிகச்சிறந்த பல்கலைக்கழகம் போலத் திகழ்ந்த தங்களது குடும்பத்தை அன்புமணி சிதைத்துச் சின்னாபின்னமாக்கிவிட்டதாகவும், இதில் அவருடைய மனைவி சௌமியா மற்றும் பேத்திகளுக்கும் பங்குண்டு என்றும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “என்னோடு பல ஆண்டுகாலமாகப் பாசத்தோடு இருந்த கட்சித் தோழர்களையும், என்னை தெய்வம் என்று போற்றிய முன்னோடிகளையும் அன்புமணி பணம் கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டார்” என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். கட்சி முன்னோடிகளைக் கேவலமாகப் பேசுவதையே அவர் தொழிலாகக் கொண்டிருப்பதாகச் சாடிய ராமதாஸ், “நான் இரண்டு முறை உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோதும் என்னைப் பார்க்க வரவில்லை; ஆனால், வெளியில் ‘என்னைத் தந்தை அருகில் விடமாட்டேன் என்கிறார்கள்’ என்று அவர் பெற்ற பிள்ளைகளும் சேர்ந்து பொய் சொல்லி வருகிறார்கள்” என்று குடும்பத்திற்குள் இருக்கும் விரிசலைப் போட்டுடைத்தார்.

   

“சுமார் 30 முதல் 40 பேர் கொண்ட பெரிய கூட்டுக் குடும்பத்தைச் சீரழித்து, பாசத்தை வேரறுத்துவிட்டு அதில் அவர் குளிர்காய்கிறார்” என்று ராமதாஸ் சாடினார். தனக்கு உடல்நிலை சரியில்லாதபோது தமிழ்நாட்டின் அனைத்து தலைவர்களும் நலம் விசாரித்த நிலையில், அன்புமணியைச் சுற்றியிருக்கும் ஒரு கூட்டம் மட்டும் “எனக்கு வயதாகிவிட்டது, நான் செயல்படமாட்டேன்” என்று ஜால்ரா போட்டுக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். அப்படிப் பேசுபவர்களின் வேஷத்தை மக்கள் முன்னிலையில் கலைக்க வேண்டும் என்றும், அன்புமணியின் இந்தச் செயல்பாடுகள் குடும்பத்தையும் கட்சியையும் ஒருசேரச் சிதைத்துவிட்டதாகவும் அவர் மிகுந்த மனவருத்தத்துடன் பேசினார்.

   

அவர்கள் கண்களில் கிளிசரின் வைத்து அழுது நடிப்பார்கள் என்றும், பொய் பேசுவதிலும் நடிப்பதிலும் அவர்கள் அத்தனை கைதேர்ந்தவர்கள் என்றும் அவர் சாடினார். குறிப்பாக, தனது பேத்திகள் அழுவதைப் பார்த்துப் பொதுமக்கள் தன்னைத் தவறாக நினைக்கலாம், ஆனால் அது முழுக்க முழுக்கத் திட்டமிடப்பட்ட நடிப்பு என்றும், ஒரு குடும்பமே சேர்ந்து தன்னைத் தவறாகச் சித்தரித்து நாடகமாடி வருவதாகவும் அவர் மிகக் காட்டமாகத் தெரிவித்தார்