பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அன்புமணியை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்த ராமதாஸ், அவர் இனி செயல் தலைவர் மட்டுமே என்றும் கட்சியின் நிறுவனராகவும் தலைவராகவும் நானே செயல்படுவேன் என்றும் அறிவித்துள்ளார். அதே சமயம் ராமதாஸ் மூலம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை அன்புமணி கட்சியில் சேர்ப்பதாக அறிவித்தார். இப்படி இருவரும் மாறி மாறி அறிவிப்பு வெளியிட்டு வருவதால் பாமகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாமகவில் இருந்து அன்புமணியை தற்காலிகமாக நீக்கும் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி நடந்தால் கட்சி, சின்னத்துக்கு அன்புமணி உரிமை கோர வாய்ப்புள்ளது என்பதற்காக முன்கூட்டியே ராமதாஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. கட்சி மற்றும் சின்னத்துக்கு அன்புமணி உரிமை கூறினால் தங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
