அந்த வகையில் 1991 ஆம் ஆண்டு வெளியாகி கவனம் வெள்ளி விழா கண்ட படம்தான் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’. உதவி இயக்குனராக இருந்த போது 12 ஆண்டுகளுக்கு முன்னர் தான் எழுதிய ஒரு கதையை அவர் அப்போது தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் இருந்த ராஜ்கிரணிடம் கூறியுள்ளார். அந்த கதை ராஜ்கிரணுக்கு பிடித்துவிடவும், அதில் இருந்த மாயாண்டி என்ற முரடனின் கதாபாத்திரம் தனக்கு பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்து தானே நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் முதலில் ராமராஜனைதான் நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர் நெகட்டிவ் தன்மையுள்ள கதாபாத்திரம் என்பதால் யோசித்துள்ளார். அதனால் ஒரு கட்டத்தில் ராஜ்கிரண் நானே இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி இறங்கியுள்ளார். படம் வெளியாகி அவரை முன்னணி கதாநாயகன் ஆக்கியது. ஒரு கட்டத்தில் ரஜினி, கமலுக்கு இணையான சம்பளத்தை அவர் பெற்றார்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள்ளாகவே ஹீரோவாக அவரின் மார்க்கெட் விழுந்தது. அதன் பின்னர் குணச்சித்திர நடிகராக நந்தா திரைப்படத்தில் ரி எண்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் அவரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற தொடர்ந்து இப்போது வரை குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார்.
ஆனால் ராஜ்கிரண் வில்லனாக மட்டும் நடிக்க மாட்டேன் என பிடிவாதமாக தொடர்ந்து மறுத்து வருகிறார். அது குறித்து அவரே ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “நான் வந்து கமல்ஹாசன், நாசர், விக்ரம் மற்றும் சூர்யா போல நடிப்பை எனது மூச்சாகக் கொண்டவன் கிடையாது. வரும் கதாபாத்திரங்களில் எது எனக்குப் பொருந்துகிறதோ, எனது குணத்தோடு ஒத்துப் போகிறதோ அந்த கதாபாத்திரங்களை மட்டும் நான் தேர்வு செய்து நடிக்கிறேன். இப்படிதான் தவமாய் தவமிருந்து படத்தில் நடித்தேன்.
அந்த படம் வந்ததும் எங்கு வெளியில் சென்றாலும் என்னைப் பார்ப்பவர்கள் ‘அப்பா அப்பா’ என ஆசையோடு பேசுகிறார்கள். அந்தளவுக்கு அந்த கதாபாத்திரம் அவர்களுக்கு பிடித்துள்ளது. என்னை அப்பாவாகவே பல பேர் நினைக்கிறார்கள். அப்படி இருக்கும் போது நான் வில்லனாக நடித்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அது உங்கள் படத்துக்குதான் நஷ்டம் எனக் கூறி வில்லன் வேடத்தில் நடிக்கக் கேட்டவர்களைத் திட்டி அனுப்பிவிட்டேன்.” எனக் கூறியுள்ளார்.