தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த இயக்குனராகவும் ஒளிப்பதிவாளராகவும் அறியப்படுபவர் ராஜீவ் மேனன். நிறைய விளம்பர படங்கள் இயக்கியுள்ள அவர் மைண்ட் ஸ்க்ரீன் என்ற சினிமா பயிற்சி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் இயக்கிய மின்சாரக்கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மற்றும் சர்வம் தாளமயம் ஆகிய படங்கள் எதுவுமே வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் இன்றளவும் பேசப்படும் படங்களாக அமைந்துள்ளன.
தமிழில் இவர் மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆனார். அதன் பின்னரும் இவர் தமிழில் மணிரத்னம் படங்களுக்கு மட்டும்தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இடையில் இவர் இயக்குனர் ஆகிவிட்டதால் அதிக படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யவில்லை.

இந்நிலையில் மணிரத்னம் தான் இயக்கிய ரோஜா படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் ராஜீவ் மேனனைதான் கேட்டாராம். ஆனால் அவர் நடிப்பில் ஆர்வம் இல்லை என சொல்லிவிட்டு அரவிந்த் சுவாமியை நடிக்கவைக்கலாம் என சொன்னாராம். அப்படிதான் அந்த படத்தில் அரவிந்த் சுவாமி வந்துள்ளார்.
ஆனால் பல ஆண்டுகள் கழித்து இப்போது வெற்றிமாறனின் விடுதலை படத்தில் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மணிரத்னம் அழைத்த போது நடிக்காமல் போனது ஏன் என்பது குறித்து ராஜீவ் மேனன் பதிலளித்துள்ளார். அதில் “மணிரத்னம் ரோஜா படத்தில் நடிக்க அழைத்தும் நான் நடிக்க மறுத்ததற்குக் காரணம் சுஹாசினிதான். ஏனென்றால் அவர் மிகச்சிறந்த ஃபோட்டோகிராஃபர். அவர் காலேஜில் எனக்கு சீனியர். ஆனால் அவர் நடிக்கத் தொடங்கியதும் யாருமே அவரின் புகைப்படத் திறமையைப் பற்றி பேசவில்லை. அதே போல எனக்கும் நடக்கும் என்பதால்தான் நடிப்பை வேண்டாம் என்றேன்.” எனக் கூறியுள்ளார்.
