சமுத்திரக்கனி தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர் மற்றும் நடிகராவார். ஆரம்பத்தில் இயக்குனர் கே பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார் சமுத்திரக்கனி. 2003 ஆம் ஆண்டு “உன்னை சரணடைந்தேன்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இது சிறந்த கதை வசனத்திற்கான தமிழ்நாடு மாநில விருதை வென்றது.
தொடர்ந்து நாடோடிகள், சாட்டை, அப்பா போன்ற நல்ல சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை கொண்ட படங்களை இயக்கினார் சமுத்திரக்கனி. நடிகராக இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களை ஏற்று சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். இவரது நடிப்பு பார்ப்பவர்களின் மனதில் பதியும் அளவிற்கு இருக்கும்.
அந்த வகையில் தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “திருமாணிக்கம்”. லாட்டரி சீட்டை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினர்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு லெட்டரை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.
அந்த லெட்டரில், “ஒரு நல்ல படத்துக்கு அடையாளம் படம் பார்த்த பிறகு அதில் வரும் காட்சிகள் கதாபாத்திரங்கள் நான்கு நாட்களுக்கு நினைவில் வந்து கொண்டே இருக்கணும். அந்த படத்தில் வரும் ஏதாவது ஒரு விஷயம் வாழ்க்கையில் நாமும் கடைபிடிக்கணும் என்ற எண்ணம் உருவாகனும்.
இந்த மாதிரி சமீபத்தில் நான் பார்த்த திருமாணிக்கம் என்கிற படம் ஒரு அற்புதமான படைப்பு. உண்மை சம்பவத்தை வைத்து திரைக்கதை வசனத்தை எழுதி சிறப்பாக இயக்கி இருக்கும் நந்தா பெரியசாமி அவர்கள் தான் ஒரு அற்புதமான இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
இந்தத் திரைப்படம் இவ்வளவு சிறப்பாக உருவாக பணியாற்றி இருக்கும் மைனா சுகுமார், விஷால் சந்திரசேகர், குணா, ரகு அவர்களுக்கும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் எனது அருமை நண்பர் சமுத்திரக்கனி, மதிப்பிற்குரிய பாரதிராஜா மற்றும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் இந்த படத்தை தயாரித்திருக்கும் ஜி பி ரவிக்குமார் மற்றும் என்னுடைய அருமை நண்பர் லிங்குசாமி மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்” என்று அந்த லெட்டர் மூலம் பாராட்டுகளை பகிர்ந்திருக்கிறார் ரஜினிகாந்த்.