தமிழ் சினிமாவில் 80களில் இறுதியில் இசைஞானி இளையராஜாவின் ஆதிக்கம் தான் நிறைந்திருந்தது. அந்த சூழலில் தான் இசை புயல் ஏ ஆர் ரகுமான் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதே காலகட்டத்தில் கானா பாடல்களின் தந்தையாக விளங்கும் தேவாவும் அறிமுகமானார். இந்த இரண்டு பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில் தானும் ஒரு சிறந்த இசையமைப்பாளராக மாற வேண்டும் என்று எண்ணி அதுவரை பிளாட்பார்ம் பாடல்கள் என்று அழைக்கப்பட்டு வந்த பாடல்களுக்கு கானா பாடல் என்று பெயரிட்டு தன்னுடைய திரைப்படங்களில் அதை பெரிய அளவில் பயன்படுத்தியது மட்டுமல்லாமல் அந்த விஷயத்தில் மிகப்பெரிய சாதனை படைத்தவராக தேவா மாறினார்.

கடந்த 1989 ஆம் ஆண்டு தமிழில் பிரபல நடிகர் ராமராஜன் நடிப்பில் வெளியான மனசுக்கேத்த மகாராசா திரைப்படம் மூலம் தான் தேவா இசை அமைப்பாளராக அறிமுகமானார். தமிழில் தொடர்ச்சியாக நல்ல பல படங்களை கொடுத்து வந்த தேவாவிற்கு கடந்த 1990 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படம் தான் முதன் முதலில் தமிழக அரசு வழங்கும் மாநில விருதை பெற்று தந்தது. 1991 ஆம் ஆண்டில் மட்டும் தேவா இசையில் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளியான நிலையில் இவர் தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் என்ற புகழைப் பெற்றார்.

அதனைப் போலவே கானா பாடல்கள் மட்டுமே தேவாவுக்கு மிகப்பெரிய ஹிட்ஆகி வந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படம் ஒன்றுக்கு அவர் அமைத்த அனைத்து பாடல்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. கடந்த 1992 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாமலை திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இப்படியான நிலையில் அண்ணாமலை படத்திற்கு இசையமைத்தது குறித்து தேவா சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

அதில், நான் சினிமாவுக்கு முயற்சி செய்து கொண்டிருந்த காலத்தில் வேலு செட்டியார் வீட்டுக்கு சைக்கிளில் வருவேன். அப்போது அவர் வீட்டில் ரஜினி இருந்தார். அப்போதான் முதல் முறையாக நான் அவரை சந்தித்தேன். பிறகு அண்ணாமலை படத்தில் இடம்பெற்ற ஒரு பெண் புறா என்ற பாடல் ரஜினிக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. அந்தப் பாட்டை கேட்டுட்டு எனக்கு முதல் முறை போன் பண்ணாரு. அப்போ ரொம்ப நல்லா இருக்குன்னு பாராட்டிட்டு வச்சிட்டு பிறகு பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை போன் பண்ணிக்கிட்டே இருந்தாரு. அந்த அளவுக்கு அந்த பாட்டு அவருக்கு ரொம்ப பிடிச்சிருச்சு என்று தேவா கூறியுள்ளார்.
