ஒரு சிலருக்குதான் சினிமா வாழ்க்கை எப்போதுமே மேல்நோக்கி செல்லும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஸ்ரீதேவி. 1969-ஆம் ஆண்டு ரிலீசான துணைவன் என்ற திரைப்படத்தில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார். கடந்த 1976-ஆம் ஆண்டு கே.பாலச்சந்தரின் மூன்று முடிச்சு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தனது பயணத்தை ஆரம்பித்தார்.
முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோருடன் இணைந்து ஸ்ரீதேவி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அவர் நடிப்பில் வெளியான 16 வயதினிலே, மூன்றாம் பிறை மற்றும் வாழ்வே மாயம் போன்ற எண்ணற்ற படங்கள் அவரை முன்னணிக் கதாநாயகி ஆக்கின.தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து அந்த காலத்திலேயே பான் இந்தியா நடிகையாக வலம் வந்தார்.

மூன்றாம் பிறை படத்தின் இந்தி பதிப்பான சத்மா படம் வெளியாகி சூப்பர் ஹிட்டாக அவருக்கு அங்கு மிகப்பெரிய மார்க்கெட் உருவானது. அதன் பிறகு அவர் தமிழில் படங்கள் நடிக்கவிலை. அடுத்தடுத்து இந்தி படங்களில் நடித்து சூப்பர் ஸ்டார் நடிகையானார். 80 களிலும் 90 களின் தொடக்கத்திலும் அவரின் படங்கள் இந்தியா முழுவதும் சூப்பர் ஹிட்டாகின. அந்த காலத்தில் அவர் அறிவிக்கப்படாத மிஸ் இந்தியாவாக இருந்தார். இந்திக்கு சென்ற பின்னர் அவர் பெரும்பாலும் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. பல ஆண்டுகள் கழித்து புலி படத்தில்தான் மீண்டும் நடித்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஸ்ரீதேவியின் நடிப்பில் மிரண்டு போய் வியந்து பாராட்டிய சம்பவம் ஒன்றை மறைந்த இயக்குனர் மகேந்திரன் பழைய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் “ஜானி படத்தின் சில காதல் காட்சிகளை ரஜினி மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரை வைத்து படமாக்கினோம். ஸ்ரீதேவி செல்லமாக ரஜினியிடம் கோபித்துக்கொள்வது போன்ற ஒரு காட்சியை எடுத்ததும் ரஜினி என்னிடம் வந்து “என்னங்க இந்த பொண்ணு இப்படி நடிக்குது. இது எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுடும்” என்றார்.” என தெரிவித்துள்ளார். ரஜினி சொன்னது போலவே ஸ்ரீதேவி அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வந்தார் என்பதை சொல்ல தேவையில்லை.
