தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது.
அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார். அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். அதிலிருந்து இப்போது வரை தமிழ் சினிமாவின் மாஸ் மகாராஜாவாக இருக்கிறார். தற்போது தன்னுடைய 73 வயதிலும் தன்னுடைய அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜித் ஆகியோருக்கு போட்டியாக களத்தில் நிற்கிறார்.
சினிமாவைத் தவிர்த்து ரஜினி அரசியலிலும் ஆன்மிகத்திலும் ஆர்வம் காட்டி வந்தார். தற்போது அரசியலில் இருந்து அவர் தன்னை முழுமையாகத் துண்டித்துக் கொண்டார். ஆனால் இன்னமும் ஆன்மீகவாதியாகவே தன்னைக் காட்டிக் கொண்டு வருகிறார். வருடத்துக்கு ஒருமுறை இமயமலை செல்வது அங்கு தியானத்தில் ஈடுபடுவது என இருந்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினி நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அந்த படத்தில் ரஜினி ஒரு கௌரவ வேடத்தில்தான் நடித்திருந்தார். ஆனால் அதை ரஜினி படம் போல வியாபாரம் செய்ததால் முடிவு வேறு மாதிரியாக அமைந்தது.
இந்நிலையில் ரஜினி கௌரவ வேடத்தில் நடிக்கும் எந்த படமும் சரியாக ஓடாது என்று கருத்து நிலவி வருகிறது. அது ஓரளவுக்கு உண்மைதான். கடந்த 30 ஆண்டுகளில் ரஜினி கௌரவ வேடத்தில் நடித்த படங்களை எடுத்துக் கொண்டால் வள்ளி, குசேலன், ரா ஒன் மற்றும் லால் சலாம் ஆகிய படங்கள் அனைத்துமே தோல்விப் படங்கள்தான்.
