Live-in relationship

18 வயது ஆனவர்கள் லிவ் – இன் முறையில் சேர்ந்து வாழ தடை இல்லை – ராஜஸ்தான் நீதிபதி வெளியிட்ட அதிரடி தீர்ப்பு!

By Elango on மார்கழி 6, 2025

Spread the love

ராஜஸ்தானைச் சேர்ந்த 18 வயது இளம் பெண்ணும் 19 வயது இளைஞனும் எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்துடன் லிவ் இன் முறையில் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் இந்த உறவுக்கு இரு தரப்பினரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த இளம் ஜோடி போலீசில் புகார் அளித்தும் அவர்கள் தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி இந்த லிவ் இன் ஜோடி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

ராஜஸ்தான் உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இளைஞருக்கு சட்டபூர்வமான திருமண வயது 21. இன்னும் 21 வயது ஆகவில்லை என்பதால் அவர் லிவ் இன் முறையில் சேர்ந்து வாழ முடியாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, 18 வயதை கடந்தவர்கள் லிவ் இன் முறையில் வாழ சட்டப்படி எந்த தடையும் இல்லை. சட்டபூர்வமான திருமண வயது என்பது ஒருவரின் தனி உரிமையை பாதிக்காது.

   

இந்தியாவில் லிவ் இன் உறவு முறை என்பது சட்டவிரோதமோ அல்லது குற்றச் செயலோ அல்ல. வயது வந்தோரின் வாழ்வுரிமையை சட்டப்பிரிவு 21 பாதுகாக்கிறது. வாழும் இடத்தையும் வாழ்க்கை துணையையும் தேர்வு செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. 18 வயதை கடந்த இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தால் அவர்களின் முடிவில் அரசு தலையிட முடியாது என்று நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் மனுதாரர்களுக்கு ஆபத்து இருக்கும் பட்சத்தில் உடனடியாக அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.