பீகார் மாநிலத்தில் சொத்துக்களின் குறைந்தபட்ச மதிப்புப் பதிவேடு (MVR) மாற்றியமைக்கப்பட்டு, புதிய நிலப் பதிவுக் கட்டணங்கள் ஜூன் 19 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த புதிய மாற்றத்தின்படி நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலப் பதிவுக் கட்டணங்கள் சுமார் 2 மடங்கும், கிராமப்புறங்களில் 1.6 மடங்கும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. இத்துடன் முத்திரைத்தாள் (Stamp Duty) கட்டணமும் 6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் நிலத்தின் அரசு மதிப்பு அதிகரிப்பதால், பொதுமக்கள் தங்கள் சொத்துக்களின் மீது வங்கிகளில் அதிக கடன் பெற வழிவகை ஏற்படும் என்றும், நில ஆவணங்களில் வெளிப்படைத்தன்மை அதிகரித்து முறைகேடுகள் குறையும் என்றும் பீகார் மாநில அரசு நம்புகிறது.
பீகாரின் இந்த அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து, ‘தமிழகத்திலும் நிலப் பதிவுக் கட்டணங்கள் உயருமா?’ என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், மாநிலத்தில் முத்திரைத்தாள் கட்டணம் சந்தை மதிப்பை விட குறைவாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், கடந்த 2023ஆம் ஆண்டில் 100 ரூபாய் முத்திரைத்தாள் 1000 ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைத்தாள் 200 ரூபாயாகவும் உயர்த்தப்பட்ட வரலாறு உள்ளதால், இங்கும் கட்டணங்கள் விரைவில் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.
இருப்பினும், பீகாரைப் போல தமிழகத்தில் உடனடியாக இரண்டு மடங்கு கட்டண உயர்வு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு என்று துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர். பீகாரில் சொத்துக்களின் குறைந்தபட்ச சந்தை மதிப்பு மிகக் குறைவாக இருந்ததால் அங்கு இந்த அதிரடி உயர்வு தேவைப்பட்டது. ஆனால், தமிழகத்தில் ஏற்கனவே பெரும்பாலான பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு சந்தை விலைக்கு நிகராக சீரமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் தற்போது நிலப் பதிவுக் கட்டணம் ஏற்கனவே 11 சதவீதமாக இருப்பதாலும், சமீபத்தில்தான் சேவைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாலும், உடனடியாக பொதுவான நிலப் பதிவுக் கட்டணங்கள் மேலும் உயர்வதற்கு வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.
