மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மெட்ரோ சேவையைத் தொடங்கி வைக்க உள்ள நிலையில், புதிய மான் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் மழைநீர் பாய்ந்து ஒழுகிய சம்பவம் கட்டுமானத் தரம் குறித்துப் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
புனேவில் இஞ்சவாடி மான் பகுதியிலிருந்து சிவாஜி நகர் வரை 23.2 கி.மீ தொலைவிற்கு ரூ.8,313 கோடி மதிப்பீட்டில் பொது-தனியார் பங்களிப்பு முறையில் ‘புனே மெட்ரோ லைன் 3’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்க உள்ள நிலையில், திறப்பு விழாவிற்கு சில நாட்களுக்கு முன்பாக மான் மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் மொட்டை மாடியில் உள்ள மழைநீர் வடிகால் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் மொட்டை மாடியில் தேங்கிய மழைநீர் நிலையத்தின் பயணிகள் நடமாடும் பகுதிக்குள் அருவி போலக் கொட்டி நீர் தேங்கியது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கழிவறை மற்றும் நடைபாதைப் பகுதிகளில் நீர் தேங்கியதால், நிலைய ஊழியர்கள் பக்கெட்டுகள் மற்றும் வைப்பர்களைக் கொண்டு தண்ணீரைக் வெளியேற்றினர்.
இந்த வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வடிகால் குழாய் அடைப்பு சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், கட்டிட அமைப்பில் எந்தக் குறைபாடும் இல்லை என்றும் புனே பெருநகரப் பகுதி வளர்ச்சி முகமை முதன்மைப் பொறியாளர் ரீனாஜ் பதான் விளக்கமளித்துள்ளார். இருப்பினும் திறப்பு விழா நேரத்தில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதம் இணையத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
