தமிழகத்தில் புதிய ரயில் திட்டப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில், நிலம் கையகப்படுத்துவதில் எவ்வித தாமதமும் இருக்கக்கூடாது என்று தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அதிரடி அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வருவாய்த்துறை உள்ளிட்ட தேவையான அனைத்து துறைகளையும் முறையாக ஒருங்கிணைத்து, ரயில்வே திட்டங்களுக்கான நில ஒதுக்கீட்டுப் பணிகளை மிக விரைவாக முடித்து ஒப்படைக்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு இன்னும் 75 விழுக்காடு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடையாமல் தேங்கிக் கிடப்பதாகத் தெற்கு ரயில்வே சுட்டிக்காட்டியதுடன், இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியிருந்த நிலையில், மாநில அரசின் இந்த துரித உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
