தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நிலவி வந்த அரசியல் மோதல் போக்கு, தற்போது மெல்ல மெல்ல சமாதானத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “நமது அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைக் காப்பதில் நாம் கொண்டுள்ள கூட்டு உறுதிப்பாடு தொடர்ந்து நமக்கு வழிகாட்டும்; வெற்றி பெறும் வரை நாம் ஒன்றிணைந்து போராடுவோம்” என உருக்கமாகக் குறிப்பிட்டு, திமுகவிற்கு மீண்டும் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த இரு கட்சிகளுக்கும் இடையிலான பஞ்சாயத்து நேற்று இன்று தொடங்கியதல்ல; தேர்தல் அறிவிப்பிற்கு முன்பிருந்தே புகைந்து கொண்டிருந்ததுதான். குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்குப் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையைக் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் போன்ற தலைவர்கள் வெளிப்படையாகவே முன்வைத்தனர். ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆட்சி முறைப்படி அதிகாரப் பகிர்வுக்குச் சற்றும் உடன்படாத திமுக, “ஆட்சியில் பங்கு தர முடியாது” என்பதில் கராக் ஆக இருந்தது. இந்த உரசல்களுக்கு மத்தியிலும், தேர்தல் என்று வந்தபோது தனது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை விட காங்கிரஸுக்குக் கூடுதல் தொகுதிகளையும், மாநிலங்களவை (ராஜ்யசபா) இடத்தையும் வழங்கி பெருந்தன்மையைக் காட்டியது திமுக.
இருப்பினும், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழக அரசியல் களம் தலைகீழாக மாறியது. தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவு தேவைப்பட்டதால், திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக பக்கம்போய்ச் சேர்ந்தது காங்கிரஸ். திமுக கூட்டணியில் இருந்த இடதுசாரிகள் மற்றும் விசிக போன்ற கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவு தந்தாலும், அவர்கள் முறைப்படி மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துத் தங்களின் நிலைப்பாட்டைக் கூறிவிட்டே வெளியேறினர். ஆனால், இருபது ஆண்டுகாலம் ஆளுங்கட்சி அந்தஸ்தோடு கூட்டணியில் நீடித்த காங்கிரஸ், திமுக தலைமையை ஒரு வார்த்தை கூட மதிக்காமல், பெயருக்குக் கூடச் சந்திக்காமல் வெளியேறியது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரிடையே கடும் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக, டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய ‘இந்தியா’ (INDIA) கூட்டணி கூட்டத்தைப் புறக்கணித்தது திமுக. அதுமட்டுமன்றி, காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பிற மாநிலத் தலைவர்களான மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ் மற்றும் இடதுசாரிகள் முன்வைத்த விமர்சனங்களைப் பேனர்களாக அச்சிட்டு, டெல்லி கூட்ட அரங்குப் பகுதியிலேயே வைத்துத் தனது கண்சாடை எதிர்ப்பை உக்கிரமாகப் பதிவு செய்தது. இந்த அடுக்கடுக்கான மோதல்களால் ‘இந்தியா’ கூட்டணியில் பெரும் விரிசல் விழுந்தது போலத் தோன்றிய நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டார். இது இரு கட்சிகளுக்கும் இடையே நிலவிய பனிப்போரைத் தளர்த்தும் முதல் சமாதானப் புள்ளியாகப் பார்க்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஐந்தாவது பெரிய கட்சியாக விளங்கும் திமுகவை இழப்பது ‘இந்தியா’ கூட்டணிக்குத் தேசிய அளவில் பெரும் பலவீனத்தை உண்டாக்கும் என்பதை ராகுல் காந்தி நன்கு உணர்ந்துள்ளார். மேலும், திமுகவை காங்கிரஸ் கையாண்ட விதம் தவறானது என்று டெல்லி கூட்டத்திலேயே கேரள இடதுசாரி தலைவர்கள் ராகுல் காந்தியை நேரடியாக விமரிசித்திருந்தனர். இந்த அரசியல் சூழல்களையும், தேசிய அளவிலான கட்டாயங்களையும் கணக்கில் கொண்டே, ராகுல் காந்தி தற்போது மு.க.ஸ்டாலினின் வாழ்த்தை ஏற்று, “ஒன்றாக இணைந்து போராடுவோம்” எனப் பாசக்கரம் நீட்டியுள்ளார். இந்த சமாதான நகர்வு, ‘இந்தியா’ கூட்டணியை மீண்டும் வலுப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
