சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருக்கும் நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சியினர் திரைக்கு முன்னும், பின்னும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடந்த 2017 ஆம் வருடம் முதலே கூட்டணியில் இருந்து வருகிறது. அதேபோல பாஜகவில் அதிமுக இணைந்திருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த கால தேர்தலை போலவே தனித்து நிற்பதில் உறுதியாக உள்ளார் சீமான்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் தேர்தல் களத்திற்கு புதிது. திமுக, பாஜகவோடு கூட்டணி அமைக்கமாட்டோம் என்று வெளிப்படையாக கூறிவிட்டது. அப்படி என்றால் அதிமுகவோடு விஜய் கூட்டணி அமைப்பாரா? என்று கேள்வி எழுந்தது அதற்கும் வாய்ப்பில்லை. தற்போதைய சூழலில் வரும் சட்டசபை தேர்தலில் விஜயின் அறிவிப்பு, சீமானின் தனித்து போட்டி என்ற விடாப்படி கொள்கை ஆகியவற்றால் நான்கு முனை போட்டி உறுதியாக இருக்கிறது.
இதற்கிடையில் மதுரையில் ஆகஸ்ட் 25-ம் தேதி தவெகவின் 2-வது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் முகமாக இருக்கும் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை கணக்குப்போட்டு, மாநாட்டிற்கு முன்னதாக, டெல்லிக்கு நேரடியாகவே சென்று ராகுல் காந்தியை சந்தித்து விஜய் பேச்சுவார்த்தை நடத்தவும் இருக்கிறாராம். ஒருவேளை இதுமட்டும் நடந்தால், திமுக கூட்டணி உடைவது உறுதி என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
