தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
அதுபோல இளையராஜாதான் நாட்டுப்புற பாடல்களில் இருந்தே ட்யூன்களை எடுத்து அதை மெருகேற்றி பாடல்களை கொடுத்து மக்களை மெய்மறந்து ரசிக்க வைத்தார். இளையராஜா அறிமுகமான போது அவருக்கு மக்களிடம் கிடைத்த ஆதரவு அப்போதிருந்த விமர்சகர்களிடம் கிடைக்கவில்லை.
ஆனாலும் அனைத்தையும் தாண்டி தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக 15 ஆண்டுகளுக்கு மேல் வலம் வந்தார். ரஹ்மானின் வரவுக்குப் பின்னரே தமிழ் சினிமாவில் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இளையராஜாவை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை மாறியது.

இந்திய சினிமாவிலேயே இசையைக் குறிப்புகளாக எழுதத் தெரிந்த ஒரே இசையமைப்பாளர் இப்போது இளையராஜா என்பது போன்ற செய்திகள் அடிக்கடி பரவி வருகின்றன. இந்நிலையில் பிரபல இசையமைப்பாளரும் ரஹ்மானிடம் கீபோர்ட் ப்ளேயராக பணியாற்றியவருமான ஜோஷ்வா ஸ்ரீதர் இதுபற்றி பேசும்போது “நான் ரஹ்மானிடம் முதல் முதலாக வாசிக்க சென்ற போது அவர் எனக்கு நோட்ஸ்தான் கொடுத்தார். இளையராஜா அளவுக்கு வேகமாக எழுதவில்லை என்றாலும் மெதுவாக எழுதிக் கொடுத்தார்.
ஆனால் நான் சரியாக வாசிப்பதை பார்த்துவிட்டு அதன் பின்னர் நோட்ஸ் கொடுப்பதை நிறுத்திவிட்டார். என்ன வேண்டும் என்பதை மட்டும் சொல்லிவிடுவார்” எனக் கூறியுள்ளார். இதிலிருந்து ரஹ்மானும் நோட்ஸ் எழுதக் கூடிய இசையமைப்பாளர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
