“எத்தனை நாள்தான் பொறுப்பது?… நீதிமன்றத்தில் சந்திக்கிறோம்!” – தவெகவுக்கு ஆப்பு வைக்கும் திமுக…. முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி….!

By Nanthini on ஐப்பசி 31, 2026

Spread the love

புதுக்கோட்டை நகரமன்றத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தற்போது தவெக ஆட்சியில் திறக்கப்படும் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் அனைத்தும், முந்தைய திராவிட மாடல் ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டுத் தொடங்கப்பட்ட திட்டங்களே என்று சுட்டிக்காட்டிய அவர், மக்கள் நலனில் அக்கறையின்றி தவெக அரசு செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டினால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகத் தெரிவித்தார். “தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, காணாமல் போகும் சிறுமிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறுவது போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் பொதுமக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த அரசின் மீதான மக்களின் வெறுப்பும் அதிருப்தியும் வரவிருக்கும் விராலிமலை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளில் வெளிப்படும்” என்று ரகுபதி உறுதியாகத் தெரிவித்தார்.

   

திமுக பொறுப்பாளர்கள் சிலர் தவெகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “கட்சியில் இருந்துகொண்டே உள்ளடி வேலை பார்த்த துரோகிகளே தற்போது வெளிப்படையாக விலகியுள்ளனர்; அதைப் பற்றி திமுக கவலைப்படவில்லை” என்றார். மேலும், அரசின் தோல்விகளை மறைக்கவும் மக்கள் கவனத்தை மடைமாற்றவுமே திமுகவினர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்ற பெயரில் பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன என்றும், அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட வழக்குகளை முறியடித்து நிரபராதி என நிரூபித்தது போல, தற்போதைய பொய் வழக்குகளையும் நீதிமன்றத்தில் தூள் தூளாக்குவோம் எனவும் சவால் விடுத்தார்.

   

எத்தனை நாட்களுக்குத்தான் இத்தகைய பொய் வழக்குகளை எதிர்கொள்வது எனக் கேள்வி எழுப்பிய ரகுபதி, திமுக மீது தொடர்ந்து அவதூறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பொய் வழக்கு போடுபவர்கள் மீது இனி நீதிமன்றத்தில் திமுக சார்பில் எதிர் வழக்குத் தொடுக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும், திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து மத்திய அரசின் விருதைப் பெற்ற சிறைத்துறை, தற்போதைய ஆட்சியில் முற்றிலும் சீரழிந்துவிட்டதாகச் சாடிய அவர், விராலிமலையில் நீதிமன்ற அனுமதிக்குப் பின் எப்போது தேர்தல் நடந்தாலும் உதயசூரியன் சின்னம் அமோக வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.