தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்குவதில் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை நிராகரித்த சில மணி நேரங்களிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள திமுக தலைமை, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீதான கைது நடவடிக்கை குறித்தும், திமுக தலைவர்கள் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சற்றும் தயங்காமல் பதிலளித்த அவர், “இந்த கேள்வியை திமுகவிடமோ அல்லது வழக்கு தொடர்ந்த தவெகவிடமோ தான் கேட்க வேண்டும். இதில் எங்களுக்கு முழு விவரம் தெரியாத என்பதால், தவறான பதிலை கூற முடியாது” என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், “ஒருவர் மீது மற்றொருவர் வழக்கு தொடர்கிறார்கள் என்றால், அந்த வழக்கை தொடர்ந்தவர்களுக்கும், அதை எதிர்கொள்பவர்களுக்கும் தான் அதன் முழு பின்னணியும் தெரியும். இடைப்பட்ட எங்களிடம் கேட்டால் என்ன தெரியும்? எனவே, இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று கூறி, இந்த விவகாரத்தில் அதிமுகவின் நிலையை தெளிவாகப் பதிவு செய்தார்.
முன்னதாக, தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சனை மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தான் சாமி தரிசனம் செய்தபோது ஏற்பட்ட மின்வெட்டு குறித்தும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார். “2006-2011 திமுக ஆட்சியில் மிகக் கடுமையான மின்வெட்டு நிலவியதை மாற்றி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தை உபரி மின்சாரம் கொண்ட மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டினார். ஆனால், முறையான திட்டமிடுதல் இல்லாமல் செயல்படும் தற்போதைய அரசு, மின்வெட்டுக்கு மழுப்பலான காரணங்களைச் சொல்லி வருகிறது” என்று குற்றம்சாட்டினார்.
