தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராக ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் என பலவகையான கதாபாத்திரங்களில் நடித்துக் கலக்கியவர் ரகுவரன். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் 1982 ஆம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாளத் திரைப்படத்தில் முதல் முதலாக சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து தமிழில் ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமாகிய ரகுவரன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஏழாவது மனிதன் திரைப்படம் 80 களில் அதிகமாக வந்த இடதுசாரி கருத்துள்ள திரைப்படங்களில் ஒன்றாகும்.
இந்த படத்தின் மூலம் ஹீரோவாக ரகுவரனுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. ஆனால் அந்த படம் கமர்ஷியலாக வெற்றி பெறாததால் ரகுவரனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால்தான் அவர் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் குணச்சித்திர வேடம் மற்றும் வில்லன் வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார். அப்படி அவர் நடித்த சிவா, சம்சாரம் அது மின்சாரம், புரியாத புதிர், அஞ்சலி ஆகிய திரைப்படங்கள் அவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத்தந்தன. ரஜினியோடு அவர் நடித்த பாட்ஷா திரைப்படம் அவரைப் புகழின் உச்சத்துக்கே கொண்டு சென்றது என்று சொல்லலாம்.

புகழின் உச்சியில் இருந்த அவர் போதைப் பழக்கங்களுக்கு ஆளானதால் அவரின் உடல்நலம் கெட்டுப் போனது. இதனால் அவரது மனைவி ரோஹினியும் அவரைப் பிரிந்தார். அந்த பழக்கங்களில் இருந்து அவர் விடுபட்டு வந்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய போது அவர் மாரடைப்பு வந்து காலமானார். தமிழ் சினிமா ஒரு சிறந்த நடிகரை அவரின் 50 வயதுக்குள்ளாகவே இழந்தது.
இந்நிலையில் ரகுவரனோடு கல்லூரியில் ஒன்றாகப் படித்த நடிகர் விச்சு விஸ்வநாத் ரகுவரன் பற்றி பேசும்போது “ரகுவரன் காலேஜ் படிக்கும்போது செம்ம ஹேண்ட்ஸம்மாக இருப்பான். அவன் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும்போதே எம் ஏ படிக்குற பெண்கள் எல்லாம் அவனை லவ் பண்ணினார்கள். காலேஜ் வந்து அட்டண்டன்ஸ் கொடுத்துவிட்டு எதிரில் இருக்கும் அவங்க ஹோட்டலுக்கு சென்றுவிடுவான். அவங்க அப்பா போனதும் நாங்களும் போய் சாப்பிட்டுவிட்டு அரட்டை அடிப்போம்” எனக் கூறியுள்ளார்.
