தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான 73 வயது ராதா ரவி, தனது உடல் எடையை 110 கிலோவிலிருந்து சுமார் 26 கிலோ வரை குறைத்து அசத்தியுள்ளார். உடல் எடை அதிகரிப்பால் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்ட அவர், சமீபகாலமாக மேற்கொண்ட தீவிர வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக தற்பொழுது சர்க்கரை நோயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த உடல்நல மாற்றத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மறைமுகமாக ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளார். ‘லிங்கா’ படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த், “அரிசி உணவை அறவே நிறுத்த வேண்டும்; உப்பு, சர்க்கரை, பால், வெண்ணெய் போன்ற வெள்ளையாக இருக்கும் பொருட்களைச் சாப்பிடக்கூடாது” என்று மற்றவர்களிடம் அடிக்கடி கூறியதை ராதா ரவி கவனித்துள்ளார். அந்த வார்த்தைகளை மனதில் பதித்துக்கொண்ட அவர், அன்றிலிருந்து டீ, காபி குடிப்பதை நிறுத்திவிட்டு, ‘பிளாக் காபி’ குடிக்கத் பழகியுள்ளார். இந்த நாள்பட்ட பழக்கமே அவரது உடல் எடையைக் குறைக்கப் பெரிதும் உதவியுள்ளது.
உணவில் சாதத்தின் அளவை வெகுவாகக் குறைத்த ராதா ரவி, தான் ஒரு அசைவ பிரியராக இருந்தாலும், அசைவ உணவுகளை எப்போதும் அளவோடு மட்டுமே சாப்பிடுவதில் கவனமாக இருந்துள்ளார். மேலும், உடல் எடை குறையும் போது நிதானமாகவும் பொறுமையாகவும் குறைய வேண்டும், வேகமாக குறைந்தால் ஆபத்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய கட்டுப்பாடான வாழ்வியல் மாற்றங்களால், தற்போது தான் ‘இன்சுலின்’ எடுப்பதையே முழுமையாக நிறுத்திவிட்டதாக அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
