தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள எ.வ. வேலு வீட்டிலான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜயிடம் எ.வ. வேலு நேருக்கு நேர் கேள்வி எழுப்பிய மறுநாளே இந்த ரெய்டு நடத்தப்பட்டிருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என்று சாடினார். ஆட்சிக்கு வந்து என்ன செய்வதென்று தெரியாமல் முதல்வர் விஜய் இவ்வாறு செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த 1977-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி வீட்டில் ரெய்டு நடந்தபோதே தாம் உடனிருந்தவன் என்றும், இன்றைய ‘சின்னப் பசங்களுக்கு’ இதெல்லாம் தெரியாது என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற அரசியல் பழிவாங்கல்களை கடந்த 50 ஆண்டுகளாகத் தி.மு.க பார்த்துப் பழகிவிட்டது என்றும், இந்த ரெய்டு பிரச்சினையை கட்சி சட்டப்படி தைரியமாகச் சந்திக்கும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார். 1977 முதல் தி.மு.க மீது போடப்பட்ட எந்தவொரு வழக்கும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய ஆர்.எஸ். பாரதி, “எங்கள் வீட்டுக்கு ரெய்டு வந்தவர்களுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்து, அவர்களை அமைச்சராக்கும் கேவலமான ஈனக் காரியத்தை தி.மு.க ஒருபோதும் செய்ததுமில்லை, செய்யப்போவதுமில்லை” என மிகக் காரசாரமாகத் தனது பேட்டியில் விமர்சித்துள்ளார்.
