சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கண்டன உரையாற்றிய ஆர்.எஸ்.பாரதி, “தமிழகம் முற்றிலும் சீரழிந்து கொண்டிருக்கிறது. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. மதுக் கிண்ணத்தில் விழுந்த வண்டு போல மக்கள் இன்னும் மயக்கத்தில் தான் இருக்கிறார்கள். தவெக ஆட்சியில் மின் கட்டணம் உயர்ந்த பிறகுதான் மக்களுக்குச் சற்று சொரணை வந்துள்ளது” என்று ஆவேசமாகப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூற முடியாமல் முதலமைச்சர் ஓடி ஒளிகிறார். தமிழகத்தில் விலைவாசி விண்ணை முட்டி நிற்கிறது. சிங்கப்படை அமைத்ததாகப் பெருமை பேசிக் கொள்பவர்கள், பெண் போலீசிடமே சிலிமிஷம் செய்து வருகிறார்கள். எனினும் வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி நிச்சயம் திமுகவுக்கே கிடைக்கும்” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
