தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பகிரங்கமாக அரசியல் சவால் ஒன்றை விடுத்துள்ளார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஏதேனும் ஒரு மேயர் இடத்திலாவது தவெக வெற்றி பெற்றால், தனது ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்ளத் தயார் என அவர் அதிரடியாகக் கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மேயர் பதவியைக் கூட திமுகவினால் கைப்பற்ற முடியாது என்று தவெக தரப்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருந்தார். அவரது இந்தக் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே ஆர்.எஸ். பாரதி இந்தச் சவாலை முன்வைத்துள்ளார். மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கோ அல்லது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கோ சவால் விடும் தகுதி ஆதவ் அர்ஜுனாவுக்கு இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
அரசியல் லாபத்திற்காகப் பல்வேறு கட்சிகளுக்குத் தாவிவிட்டு இறுதியாகத் தவெகவில் இணைந்துள்ள ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகளால் தான் தற்பொழுது முதலமைச்சர் விஜய்க்கு ஆபத்து வருகிறது என்றும் ஆர்.எஸ். பாரதி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்த இரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த நேரடி மோதல், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
