திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தளவாய்பட்டினம் பகுதியில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரச்சாரத்தின் போது பேசிய அவர்கள், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 4 மாத காலத்தில் சுமார் ரூ. 40,000 கோடி வரை கடன் வாங்கியுள்ளதே தவிர, மக்களுக்குப் பயன்படும் வகையில் எந்தவொரு நிலையான திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று கடுமையாகக் குற்றம்சாட்டினர்.
மேலும், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் 2-ஆம் தேதி தளவாய்பட்டணம் பகுதிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்து வேட்பாளரை ஆதரித்து திறந்தவெளி வேனில் வாக்கு சேகரிக்க உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கான விரிவான ஏற்பாடுகளைக் கட்சியினர் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.
பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள், அதிமுக என்பது சுமார் 54 ஆண்டுகால நீண்ட பாரம்பரியத்தையும், 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த அதிகார பெருமையையும் கொண்ட ஒரு பேரியக்கம் என்று சுட்டிக்காட்டினர். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் இயக்கத்தை எந்தவொரு ‘ஓடுகாலி’யாலும் ஒருபோதும் அழிக்க முடியாது என்றும் அவர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.
