தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ளது. அதாவது திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. இதில் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக எப்படியும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது.
மறுபக்கம் சீமான் யாருடனும் கூட்டணி வைக்காமல் தன்னந்தனி ஆளாக கட்சியை வழிநடத்தி வருகிறார். அதேசமயம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அதிமுக ஆட்சியை நிலை நாட்டுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார். இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கி உள்ளதால் விஜயை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் தனித்து தான் போட்டி என சமீபத்தில் நடந்த தமிழக வெற்றி கழகம் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் விஜயுடன் கூட்டணி அமைப்பதில் அதிமுக உறுதியாக இருப்பதை ஆர்பி உதயகுமார் மீண்டும் பதிவு செய்துள்ளார். எல்லா கட்சிகளும் அறிவிப்பது போல தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மெகா கூட்டணியை இபிஎஸ் அமைப்பார் என தெரிவித்துள்ள. தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் ஆர்பி உதயகுமார் சூசகமாக தெரிவித்துள்ளார். இதனால் அதிமுகவின் மெகா கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இடம் பெறுமா என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
