2029-ல ஆட்சி காலி… “ஒரு விஜய் இல்ல, ஓராயிரம் விஜய் வந்தாலும்…” முதல்வர் மீது அதிகாரிகள் அதிருப்தியா?…தவெக ஆட்சியைத் துவம்சம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர்…!

By Visaka on ஆடி 15, 2026

Spread the love

அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்றும், தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காரசாரமாக விமர்சித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “ஒரு விஜய் அல்ல, ஓராயிரம் விஜய் வந்தாலும் அதிமுகவை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது; இந்த இயக்கத்தை அழிக்க இந்த பூமியில் இதுவரை எவரும் பிறக்கவில்லை, இனியும் பிறக்கப்போவது இல்லை” என்று சூளுரைத்தார். மேலும், தவெக தலைவர் விஜய் தனது தந்தையின் பெயரை மட்டுமே சொல்லிவிட்டு அதிமுகவை அபகரிக்க முயற்சிப்பதாகவும், புதுச்சேரியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த நம்பி களமிறங்கியவர்கள் யாரும் தமிழகத்தில் வாழ்ந்ததாகச் சரித்திரமே இல்லை என்றும் அவர் சாடினார்.

   

அரசின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் அதிகாரிகள் மாற்றம் குறித்தும் ஆர்.பி.உதயகுமார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். லஞ்ச ஒழிப்புத்துறையில் நியமிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் இரண்டே மாதங்களில் மாற்றப்பட்டு, தற்போது மகேஸ்வரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், முதல்வர் விஜய் மீது தற்போது அரசு அதிகாரிகளுக்கோ, தலைமைச் செயலாளருக்கோ அல்லது தமிழக மக்களுக்கோ எந்தவித நம்பிக்கையும் இல்லை என்று கூறினார். தவெக அமைச்சரவையில் உள்ளவர்கள் தினமும் பேசுவதைக் கேட்கும்போதே நெஞ்சு வலிப்பதாகவும், தினமும் மாத்திரையைக் கையில் வைத்துக்கொண்டுதான் நடப்பவைகளைக் கவனிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் எள்ளி நகையாடினார்.

   

இறுதியாக, தவெக அரசு மற்ற கட்சிகளின் ஆதரவு முட்டுகளால் மட்டுமே தற்போது தப்பிப் பிழைத்து நின்று கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட உதயகுமார், அந்த முட்டுகளைத் தூக்கினால் ஆட்சி உடனடியாகக் கவிழ்ந்துவிடும் என்றார். “தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் என்று யாரும் நினைக்க வேண்டாம்; வரும் 2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை கண்டிப்பாக வரப்போகிறது. அப்போது இந்த ஆட்சி 3 ஆண்டுகள் கூடத் தாங்காது” என்று தெரிவித்த அவர், தவெக அரசுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் தனது விமர்சனத்தை நிறைவு செய்தார்.