“‘குரங்கு கையில் பூமாலை”… தமிழக முதல்வர் விஜய் திடீர் ராஜினாமா?…. ஆர்.பி.உதயகுமார் உடைத்த பரபரப்பு ரகசியம்…. பற்றி எரியும் அரசியல் களம்….!

By Nanthini on ஆடி 18, 2026

Spread the love

தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்று 75 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் அரசு நிர்வாகத்தை நடத்த முடியாமல் திணறி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக கையில் சிக்கிய தமிழகத்தின் நிலைமை குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல இருப்பதாக அரசு அதிகாரிகளே வேதனைப்படுவதாகக் குறிப்பிட்டார். மேலும், சவால்களைச் சந்திக்க முடியாமல் முதல்வர் விஜய் தனது பதவியை ராஜினாமா செய்ய தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும், மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தி மீண்டும் தேர்தல் நடத்தி தனிப் பெரும்பான்மை பெற அவரது நட்பு வட்டாரங்கள் திட்டமிட்டு வருவதாகவும் அவர் பரபரப்பு புகாரை எழுப்பியுள்ளார்.

நிர்வாகத் தடுமாற்றங்களை மறைக்க சமூக வலைதளங்கள் மூலம் போலியான பிம்பங்கள் கட்டமைக்கப்படுவதாக ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதன்முதலில் பதவியேற்ற போது, அவர் ஊழலை ஒழிக்க வந்த மகானாக இந்தியா முழுவதும் எப்படிக் கார்ப்பரேட் நிறுவனங்களால் விளம்பரப்படுத்தப்பட்டாரோ, அதே போன்றதொரு வியூகம் தான் தற்போதும் தமிழகத்தில் அரங்கேறி வருகிறது என்றார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்கள் மூலமாக முதல்வர் விஜயைப் பற்றி நடக்காத நிகழ்வுகளையும், மாயக்கதைகளையும் பரப்பி, தேசிய அளவில் ஒரு கதாநாயகன் பிம்பத்தை உருவாக்க திட்டமிட்டுப் போலிச் செய்திகள் பரப்பப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

   

ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள்ளேயே தவெக அரசு பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாகச் சிக்கல்களில் சிக்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். நீதிமன்றத் தடையால் இடைத்தேர்தல் தள்ளிப்போயுள்ளதால், விஜய்யின் தனி மெஜாரிட்டி கனவு பகல் கனவாகவே நீடிக்கிறது என்று கூறிய அவர், கூட்டணியில் உள்ள விசிக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தொடர் குடைச்சல்களால் அரசு அடுத்தடுத்து நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்தார். இதுபோன்ற அரசியல் சவால்களுக்கு ரீல்ஸ்கள் மூலமாகவோ அல்லது மீம்ஸ்கள் மூலமாகவோ தீர்வு காண முடியாது என்பதை முதல்வர் விஜய் உணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

   

அரசின் மீதான ஊழல் புகார்களைப் பட்டியலிட்ட ஆர்.பி.உதயகுமார், ஊழல் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் கண்காணிப்பதற்கே முதல்வர் விஜய் தினந்தோறும் திணறி வருவதாகக் குறிப்பிட்டார். அண்மையில் அரங்கேறிய 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்து தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்ட சம்பவமும், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக தவெகவைச் சேர்ந்த வழக்கறிஞரே நீதிமன்றம் சென்றதும் இந்த ஆட்சியின் அவல நிலையைத் காட்டுவதாகச் சாடினார். “எதைத் தின்னால் பித்தம் தெளியும்” என்ற பழமொழிக்கு ஏற்ப, வெறும் கன்டென்ட் கிரியேஷன்களை மட்டுமே நம்பியிருக்கும் தவெக அரசு, கடந்த 75 நாட்களில் தமிழகத்தில் ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை என்று கூறி தனது விமர்சனத்தை நிறைவு செய்தார்.