“அதிமுகவை அலேக்காக தூக்க பிளான் போட்ட விஜய்”… ‘டிஜிட்டல்’ அரசியலை கிழித்து தொங்கவிட்ட உதயகுமார்…. அரசியலில் அடுத்த பரபரப்பு…!

By Nanthini on ஆடி 16, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், விஜய்யின் பாப்புலாரிட்டி என்பது சமூக வலைத்தளங்கள் மூலம் பல கோடி ரூபாய் கொட்டித் தீர்க்கப்பட்டு, செயற்கையாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பம் என்று சாடியுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 35 சதவீத ஆதரவு வாக்குகளை மட்டுமே பெற்று, 65 சதவீத எதிர்ப்பு வாக்குகளை விஜய் பெற்றுள்ளார் என்று சுட்டிக்காட்டிய அவர், மக்கள் மத்தியில் தற்போதைய அரசுக்கு எதிராக இருக்கும் அதிருப்தியை மறைக்கவே திட்டமிட்ட ‘பில்டப்’கள் கொடுக்கப்பட்டு வருவதாக மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய் பேருந்தில் பயணம் செய்வது, வாட்ஸ்அப் எண் அறிவிப்பது, பயனாளிகளுடன் செல்பி எடுப்பது போன்ற அன்றாடச் செயல்கள் யாவும் ‘டிஜிட்டல் பிளாட்பார்ம்’ மூலம் ஒரு மாபெரும் சாதனை போலக் காட்சிப்படுத்தப்படுவதாக உதயகுமார் விமர்சித்தார். எதிர்க்கட்சிகள் மக்கள் நலன் சார்ந்து கேள்வி எழுப்பினால், அதற்குப் பொறுப்புடன் பதிலளிக்காமல் “வாய் இருக்கிறது என்பதால் என் மீது பழி போடுகிறார்கள்” என சினிமா பாணி வசீகர வசனங்களைப் பேசி முதலமைச்சர் விஜய் உணர்ச்சிவசப்படுவதாகவும், மக்களின் உண்மையானப் பிரச்சினைகளுக்கு இந்த அரசால் தீர்வு காண முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

   

மேலும், த.வெ.க அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, அதிமுகவின் 25 சட்டமன்ற உறுப்பினர்களைத் தன்வசம் இழுத்து, ஒட்டுமொத்தக் கட்சியையும் அலேக்காகத் தூக்கிவிடலாம் என்ற ரகசியத் திட்டத்தோடு விஜய் காய்களை நகர்த்தியதாக உதயகுமார் அதிரடி புகார் வாசித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஒரு சாமானியர் என விஜய் தப்புக் கணக்கு போட்டுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மாக்கள் தந்த ஆசியினாலும், எதற்கும் அஞ்சாத தொண்டர்களின் அசைக்க முடியாத விசுவாசத்தினாலும் அதிமுகவை விஜய்க்கு அடிமையாக்கத் துடித்த பேராசைக்காரர்களின் சதித்திட்டம் சுக்குநூறாக உடைத்தெறியப்பட்டுள்ளது என்றார்.

   

இறுதியாக, முதலமைச்சர் விஜய்யிடம் இருக்கும் சினிமா கவர்ச்சி, வசீகரம், பஞ்ச் டயலாக்குகள் மற்றும் மக்களை ஏமாற்றும் குணம் ஆகியவை எடப்பாடியாரிடம் இல்லை என்பதைத் தாங்கள் ஒப்புக்கொள்வதாகக் குறிப்பிட்ட உதயகுமார், ஆனால் அவரிடம் நியாயமும், விசுவாசமும், மக்களுக்கு அர்ப்பணிப்போடு உழைக்கும் மக்கள் சேவகன் என்ற குணமும் மட்டுமே பிரதானமாக உள்ளது என்றார். தற்போதைய சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் இல்லாமல், 108 இடங்களை மட்டுமே பெற்றுள்ள த.வெ.க அரசின் ஆட்டம் நீண்ட நாள் நீடிக்காது என்றும், எடப்பாடியார் தலைமையில் மீண்டும் தமிழகத்தில் ‘அம்மாவின் ஆட்சி’ புதிய பொலிவோடு மலரும் என்றும் அவர் சூளுரைத்தார்.