மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் ரயிலில் சக பயணியை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்றிரவு கனமழை பெய்ததால், சர்ச்கேட் – நல்லசோபரா இடையே இயக்கப்பட்ட ‘பாஸ்ட் லோக்கல்’ ரயிலில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இந்த நெரிசலான சூழலில், பயணிகளுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறின் போது ஆத்திரமடைந்த ஒரு நபர், எதிர்பாராதவிதமாகத் தனது பையில் வைத்திருந்த கத்தியை வெளியில் எடுத்துள்ளார். இதைப் பார்த்ததும் ரயிலில் இருந்த சக பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்து மிரண்டு போயினர். சக பயணிகள் சுதாரித்து அந்த நபரைக் தடுக்க முயல்வதற்குள், அவர் மற்றொரு பயணியை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
கத்திக் குத்திக் காயமடைந்த நபர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உடனடியாக ரயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் ரயிலுக்குள் நடந்த இந்த துணிகரக் கொலைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
