பஞ்சாப் அண்ட் சிண்ட் வங்கியில் காலியாக உள்ள 635 அப்ரென்டிஸ் (தொழில் பழகுநர்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்த வங்கியில், தமிழ்நாட்டிற்கு 20 பணியிடங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு கிளைகளுக்கு இந்த ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இது ஒரு தற்காலிக ஓராண்டு பயிற்சிப் பணியாகும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு (Degree) முடித்திருக்க வேண்டும். முதுகலைப் பட்டதாரி மற்றும் ஓராண்டுக்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை எழுத, படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும். மேலும், 01.05.2026 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
இப்பணிக்கு தகுதிப் பட்டியல் , நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.12,300 உதவித்தொகையாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு ரூ.200 மற்றும் எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் 21.05.2026 முதல் வரும் 06.06.2026 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
