அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் வி. புகழேந்தி, 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணிக் கணக்குகள் குறித்துப் பேசுகையில், பிரதமர் மோடி மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அன்புமணி ராமதாஸ் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் தூய்மையான அரசியலைப் பேசுவதாகக் கூறும் பிரதமர் மோடி எப்படிக் கைகோர்க்கலாம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தற்போது தமிழகத்தில் ‘அதிமுக’ என்ற கட்சியே கிடையாது என்றும், அது வெறும் ‘ஈபிஎஸ் அணி’ யாக மட்டுமே செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து டி.டி.வி. தினகரனை விமர்சித்த புகழேந்தி, நேற்று வரை எடப்பாடி பழனிசாமியைத் துரோகி என்று கூறிவிட்டு, இன்று அவரை ‘அண்ணன்’ என அழைத்துத் தழுவிக்கொண்டது வேடிக்கையாக உள்ளது என்றார். இதற்காக தினகரனுக்கு ‘300 C’ சாக்லேட்டுகள் வழங்கப்பட்டதாகவும், அந்த ‘C’ என்ற எழுத்திற்கு ‘Crore’ (கோடி) அல்லது ‘Corruption’ (ஊழல்) என மக்கள் தங்களுக்குத் தோன்றியபடி எதை வேண்டுமானாலும் அர்த்தம் கொள்ளலாம் என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டார். தினகரனின் இந்த திடீர் மாற்றமும், தேர்தலில் அவர் போட்டியிடப்போவதில்லை என்ற அறிவிப்பும் பாஜக-ஈபிஎஸ்-அமமுக கூட்டணியில் உள்ள ரகசிய பேரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
