புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஏற்கனவே ஜனவரி 15 முதல் ஜனவரி 18 வரை பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதுமக்கள் போகிப் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், நாளையும் விடுமுறை வழங்கி அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. இந்த கூடுதல் விடுமுறையையும் சேர்த்து, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 5 நாட்கள் தொடர் பொங்கல் விடுமுறை கிடைத்துள்ளது.
இந்த 5 நாட்கள் தொடர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, வரும் ஜனவரி 31-ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் வெளியூர் செல்லும் அரசுப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் சிரமமின்றித் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்ப ஏதுவாக இந்த விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
